வேலூர் தொரப்பாடி காமராஜர் தெருவைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ரவி என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. தற்போது இவர்களுக்கு 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பிரியா தனது குழந்தையுடன் தாயார் வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கணவரைப் பிரிந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவனாம்சம் கேட்டு வேலூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இதற்கிடையே, நேற்று (ஜூலை3) மாலை தனது குழந்தைக்கு காய்ச்சலாக உள்ளதால் வீட்டில் உறங்க வைத்துவிட்டு மருந்து வாங்க சென்றுள்ளார்,பிரியா.
அப்போது பிரியாவின் கணவர் ரவி உட்பட 4 பேர் கொண்ட முகக்கவசம் அணிந்த கும்பல் பிரியாவின் தாயை சரமாரியாகத் தாக்கிவிட்டு உறங்கிக்கொண்டிருந்த 6 வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் காரில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பிரியா, இதுதொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, இவை யாவும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின. தற்போது அந்த காணொலி வெளியாகியுள்ளது. அதில் 4 நபர்களுடன் வீட்டிற்குள் நுழையும் ரவி, பிரியாவின் தாய் மற்றும் பக்கத்து வீட்டினரையும் தாக்கிவிட்டு செல்லும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பாக பிரியா கூறுகையில், 'அதிகம் சந்தேகப்பட்டு தன்னையும் குழந்தையையும் தாக்கினார். இதனாலேயே நான் எனது அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். இதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டு எனது குழந்தையை கடத்திச்செல்ல முயற்சி செய்துள்ளார்.
எனது குழந்தைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. மிகவும் அச்சமாக உள்ளது. காவல் துறையினர் விரைவாக நடவடிக்கை எடுத்து எனது குழந்தையை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
இதையும் படிங்க: கணவன் - மனைவி பிரச்னைக்கு இதெல்லாம்தான் காரணமா? - தீர்வு இதோ...!