வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் காத்தவராயன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று அவசர ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் கபேரணாம்பட்டு இல்லம் கொண்டுவரப்பட்டது. அங்கு திமுக கட்சி நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பாக அவரின் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மறைந்த எம்எல்ஏ காத்தவராயனுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடைசிவரை மிகவும் எளிமையான முறையில் குடிசை வீட்டிலேயே வாழ்ந்துவந்தார். அதாவது திருமணமாகாத நிலையில் காத்தவராயன் தனது சகோதரர் வீட்டு முன்பு குடில் ஒன்று அமைத்து கடைசிவரை அதில் வாழ்ந்து வந்துள்ளார்.
ஒரே ஒரு அறை மட்டும் கொண்ட அந்தக் குடிசை வீட்டில் தான் படுப்பதற்கு ஒரு கட்டில், ஒரு டேபிள் ஆகியவைதான் அவரது உபகரணம் ஆகும். அதில் கட்சி கடிதங்கள், கரை வேட்டி மட்டுமே வைத்துள்ளார்.
சாதாரண கவுன்சிலர்கள்கூட ஆடம்பரமாக வீடு கட்டி வாழும் இப்போதைய அரசியல் கட்சியினருக்கு மத்தியில் ஒரு எம்எல்ஏவாக இருந்தும் குடிசை வீட்டில் வாழ்ந்ததோடு மட்டும் இல்லாமல், வீட்டில் தான் எம்எல்ஏ என்ற ஒரு பெயர் பலகைகூட வைக்காமல் கடைசிவரை வாழ்ந்துள்ளார். நாம் பல்வேறு இடங்களில் நம் செவிபட சிலவற்றைக் கேட்டிருப்போம்.
கர்ம வீரர் காமராசர் போல, கக்கன் போல எவரேனும் இக்கால அரசியலில் இருப்பாரா என்று. அவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக தனது கொள்கையில் பிடிப்போடும் எளிமையின் நெறி தவறாது வாழ்ந்துகாட்டிய காத்தவராயன் அவரது கட்சியினருக்கும் மட்டுமல்ல தற்கால அரசியலுக்கே ஒரு பாடம் என்றுதான் கூற வேண்டும்.
இவரது உடலுக்கு நாளை திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துகிறார். அதன் பிறகுதான் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க...போராட்டம் செய்த அரசு மருத்துவர்களைப் பணிமாற்றம் செய்த அரசின் உத்தரவு ரத்து!