வேலூர் மாவட்டத்தில் நிகழும் பெரும்பாலான துக்க வீடுகளில் கோபிநாத்-ஐ நீங்கள் பார்க்கலாம். இறந்தவரின் உறவினரிடம் தன்மையாக பேசி ஆறுதல் கூறிக் கொண்டிருப்பார். தொடர்ந்து தன்னைப் பற்றியும், தான் செய்து வரும் வேலை பற்றியும் விளக்கும், இவரின் பேச்சு பெரும்பாலும் அவர் வந்த நல்ல நோக்கத்தை நிறைவேற்றி இருக்கும்.
அதற்கு பின்பு வேகமாக அரங்கேறும் காரியங்கள், பார்வையில்லாத இரண்டு பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்காக இருக்கும்.
யார் இந்த கோபிநாத் என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா? வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்தவர், அங்குள்ள கேலக்சி ரோட்டரி சங்கத்தின் தலைவர். இதில் என்ன சிறப்பு என்பவர்களுக்கு, பர்வையற்ற பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வரும் கோபிநாத்தின் செயலே அவரைச் சிறப்பானவராக மாற்றியிருக்கிறது என்பது தான் பதில்.
கோபிநாத், கண், உடல் உறுப்பு, ரத்தம் ஆகியவைகளை தானமாக பெற்று தேவைப்படுபவர்களுக்கும், முழு உடலைத் தானமாக பெற்று மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக்காகவும் வழங்கி வரும் சேவையை செய்து வருகிறார்.
கண்ணொளி கோபிநாத்
கடந்த 2015ஆம் வருடத்திலிருந்து கண், உடல் உறுப்புகள், முழு உடலை தேவைப்படுபவர்களுக்கு தானமாக பெற்றுத் தரும் சேவையை செய்து வரும் கோபிநாத், மறைந்த முன்னாள் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர் என்.எஸ் மணி என்பவர் தான் தனது இந்த செயல்களுக்கு தூண்டு கோலாக இருந்தார் என்கிறார். தொடர்ந்து, 'தன்னுடைய கண்களை மட்டும் தானமாக வழங்காமல், 92 நபர்களின் கண்களைத் தானமாக பெற்று தேவைப்படுபவர்களுக்கு கிடைக்க அவர் உதவி செய்திருக்கிறார்' என தன் முன்னவரைப் பற்றி நினைவு கூறுகிறார் கோபிநாத்.
"கண்ணொளி கோபிநாத் என்றால் வேலூரில் அனைவருக்கும் தெரியும். இப்போது தமிழ்நாடு அளவில் தெரியக் கூடிய முகமாக மாறியிருக்கிறார். மாவட்டத்தில் யார் இறந்த தகவல் கிடைத்தாலும், அந்த வீட்டில் நிலவும் சோகமான சூழ்நிலையிலும், அவர்களைத் தொடர்பு கொண்டு இறந்தவரின் கண்களை தானமாக பெற முயற்சி செய்வார்" என தன் நண்பனின் செயல் குறித்து விளக்குகிறார் குடியாத்தம் மருத்துவமனை ரத்த வங்கி ஆய்வகத்தில் வல்லூநராக பணிபுரியும் மோகன்.
கோபிநாத் இதுவரை, 252 பேரின் கண்களைத் தானமாக பெற்று தேவையுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளார். மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக, 70 பேரின் முழு உடலைத் தானமாக பெற்றும் வழங்கியுள்ளார். ஆரம்பத்தில், வேலூர், காஞ்சிபுரம், சென்னை மருத்துவமனைகளுக்கு சேவை செய்து வந்த கோபிநாத், தற்போது புதுச்சேரி, ஆந்திரா என அண்டை மாநிலங்கள் வரை தன் சேவையை தொடர்கிறார்.
நான் ஒரு கருவி மட்டுமே
"ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்திற்குள் அவரது கண்களை தானமாக வழங்க முடியும். ஒருவர் தன்னுடைய கண்களைத் தானமாக வழங்கும் போது, அதன் மூலம் இரண்டிலிருந்து 8 நபர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்புள்ளது. உலகில் கிட்டத்தட்ட 4.5 கோடி பேர் பார்வையின்றி இருக்கின்றனர். இந்தியாவில், 1.5 கோடி பேரும், தமிழ்நாட்டில் 10 லட்சம் பேர் பார்வையின்றி இருக்கின்றனர். இவர்களில் இளைஞர்களும் சிறுவர்களும் தான் அதிகம். இவர்களில் பலருக்கு கண் தானம் மூலமாக, விழித்திரை கிடைத்தாலே அவர்களும் பார்வை பெற முடியும்" என தன் அனுபவத்தினை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கோபிநாத்.
"நான் கோபியின் நண்பன் என்பதில் எனக்கு பெருமையே. நம்மில் பலருக்கும் இதுபோல செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால், கோபி இதை ஆத்மார்த்தமாக செய்கிறார். கடவுளின் உதவியுடன் இதனை செய்து வருகிறார். அவர் ஒரு 108 ஆம்புலன்ஸ் போன்றவர். எப்போதும் நில்லாது சேவை செய்து வருகிறார்" என்கிறார் கோபிநாத்தின் நண்பர் சந்தோஷ்.
"எனது இந்த செயல்களை பாராட்டி பல அமைப்புகள் விருதுகள் வழங்கியுள்ளன. இந்த விருதுகளும், பாராட்டுகளும் கண்தானம் செய்தவர்களின் குடும்பத்தினரையும், எனது பணிக்கு உதவி வரும் ரோட்டரி சங்கத்தையும் சேர வேண்டும். இந்த சேவைகளில் நான் ஒரு கருவி மட்டுமே" கோபிநாத் வார்த்தைகளில் மிளிர்கிறது அவரது செயல்களுக்கான ஆத்மார்த்தம்.
பாராட்டுக்குரிய சேவை
கோபிநாத்தின் செயலைப் பாராட்டி, 2018ஆம் ஆண்டு வேலூர் மாவட்ட நிர்வாகம், சிறந்த சமூக சேவகர் விருது வழங்கியது. அதேபோல குடியாத்தம் ரோட்டரி சங்கம் கண் தான செம்மல் என்ற விருதையும், திருப்பூர் நேசம் அமைப்பினர் விழி தானம் விருதினையும் வழங்கியுள்ளது.
"இன்றைய இளைஞர்களிடம் கண்தானம், உடல் தானம் பற்றி விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகமாக உள்ளது. ஒருமுறை கோவையிலிருந்து ஒரு இளைஞர், தன் பிறந்த நாளில் நான் எனது கண்களை தானமாக வழங்க விரும்புகிறேன் என அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். 20 வயது இளைஞர் ஒருவர் தன் தம்பியின் கண்களை தானமாக வழங்க வேண்டும் என தொடர்பு கொண்டார் எனக் கூறும் கோபிநாத்தின் வார்த்தைகள், அவர் பயணத்தின் தொடர் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.
பலர் பல வழிகளில் தன்னாலான சேவைகளை செய்து வரும் நிலையில், இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று தேவைப்படுபவர்களுக்கு வழங்கி, சேவையாற்றி வரும் கோபிநாத் பாராட்டுக்குரியவர் தான்.
இதையும் படிங்க: ஒரு பக்கம் கல்வி, மறுபக்கம் சமூகப் பொறுப்பு - அரசுப்பள்ளி ஆசிரியையின் சமூக அக்கறை