வேலூர்: கம்மவான் பேட்டை என்கின்ற ராணுவ பேட்டை வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ளது. இந்த ராணுவ பேட்டையில் சுமார் 4000 குடும்பங்கள் உள்ளது இதில் 3000 பேர் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டும் ஓய்வு பெற்றும் உள்ளனர். கடந்த 1972ம் ஆண்டு ஒரு அரசு விழாவிற்கு முன்னாள் தமிழக ஆளுநர் கே.கே.ஷா வருகை தந்திருந்தார்.
அப்போது, அவரை வரவேற்பதற்காக கம்மவான்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ராணுவ சீருடையில் வரவேற்பு கொடுத்தனர். அப்போது, “இந்த சிறிய கிராமத்தில் இவ்வளவு ராணுவ வீரர்களா? என்று ஆச்சர்யம் அடைந்த முன்னாள் ஆளுநர் ஷா, கம்மவான்பேட்டை கிராமத்தை இனிமேல் ராணுவப்பேட்டை என்று தான் அழைக்கவேண்டும் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து அன்றிலிருந்து இந்த கிராமம் ராணுவப்பேட்டை என்றே அழைக்கப்படுவதாக, அந்த கிராமத்தினர் தெரிவித்தனர். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய்ப் புரட்சி நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. அத்தகைய வீரமிக்க அடையாளத்தைக் கொண்டுள்ள ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து, சிப்பாய்கள் முதல் அதிகாரிகள் வரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நாட்டின் முப்படைகளிலும் பணியாற்றி வருகின்றனர்.
இது தவிர, ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்கள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். குறிப்பாக, காட்பாடி, கம்மவான்பேட்டை பகுதிகளிலும் வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் பணியாற்றுபவராகவும், ஓய்வுபெற்ற ராணுவ வீரராகவும் உள்ளதாலேயே வேலூர் மாவட்டத்தை வீரம் விளையும் மண் என்றும் அழைப்பதுண்டு.
ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, தற்பொழுது ராணுவபேட்டை வந்துள்ள நரேஷ் என்பவர் தெரிவிக்கையில்,
“என்னுடைய பாட்டனார் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர், என்னுடைய அப்பா ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர், நானும் ராணுவத்தில் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றுள்ளேன். என்னைப் போன்ற பலரும் இந்த கிராமத்தில் ராணுவப் பணிக்கு சென்று தற்போது ஓய்வு பெற்றுள்ளனர். என்னுடைய திருமணம் கூட ராணுவத்தில் தான் நடைபெற்றது.
வாழ்ந்தால் ஒரு முறை வாழப் போகிறேன். அது நாட்டிற்காக வாழ்ந்து விடுவோம் என்ற எண்ணத்தில் நான் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினேன். என்னுடைய பிள்ளையும் ராணுவத்தில் பணியாற்றவே நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.
மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறும்போது, “என்னுடைய ஒரே மகனை ராணுவத்தில் சேர்த்தேன். ராணுவப் பணியில் பல ஆண்டுகாலம் வேலை செய்து வந்தான். பின்பு நாட்டிற்காக தன்னுடைய உயிரையே கொடுத்தான். என்னுடைய ஒரே மகன் இறந்ததில் எனக்கு கவலை இல்லை. இந்த நாட்டிற்காக அவன் உயிர் கொடுத்தான் என்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். இன்னொரு மகன் இருந்திருந்தால் அவனையும் ராணுவத்திற்காக அனுப்பி இருப்பேன்” என்றார்.
அதைத் தொடர்ந்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கூறும் போது, கம்மவான் பேட்டை கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ராணுவப் பணியில் பணியாற்ற வருகின்றனர், ஓய்வு பெற்றும் உள்ளனர். நானும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் தான்.
நாட்டின் மீது பற்று உள்ள காரணத்தினால் இந்த கிராமத்தில் இருந்து அதிக அளவில் ராணுவத்தில் சேர்ந்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் இருந்து பெண் எடுப்பவர்கள், ராணுவ வீரராக இருந்தால் தான் பெண் கொடுப்போம் என்கின்ற எண்ணத்தில் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் செயல்பட்டு வருகின்றனர்” என்று கூறினார். மேலும், நாட்டின் பாதுகாப்புக்காக தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றும் தேசப்பற்று தான் தங்களின் ஒரே குறிக்கோள் எனவும் பொதுமக்கள் கூறினர்.
இதையும் படிங்க: இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால் குடும்பம் படும் பாதிப்பே ’நூடுல்ஸ்’ - இயக்குநராக அறிமுகமாகும் அருவி மதன்!