வேலூர்: ஆந்திர மாநிலத்தில் வனப்பகுதிகளில் விலை உயர்ந்த செம்மரக்கட்டைகள் காணப்படுகின்றது.
இந்த செம்மரக்கட்டைகளை கடத்தல் கும்பல்கள் வெட்டி பல இடங்களுக்கு கடத்திச் செல்கின்றனர். அவ்வாறு கடத்திச் செல்லப்படும் செம்மரக்கட்டைகளை ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வனத்துறை மற்றும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து செம்மரக் கடைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் லாரிகளில் கடத்தி வரப்படும் செம்மரக்கட்டைகளை பல நபர்கள் ஒன்று சேர்ந்து லாரியை மடக்கி ஓட்டுநரை கத்தியால் வெட்டி தாக்கி விட்டு லாரியில் உள்ள செம்மரக்கட்டைகளை கடத்திச் செல்ல இருப்பதாக வேலூர் மாவட்டம், காட்பாடி போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், காட்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான போலீசார்,
தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காட்பாடி பகுதியில் சந்தேகத்துக்கிடமான நபர்களை மடக்கி விசாரித்தனர். அதில், காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்கிற வசூல்ராஜா, வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்த சையத் மன்சூர், காஞ்சிபுரம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்கிற வெள்ளை மோகன், காட்பாடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கவுஸ் பாஷா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில், செம்மரக்கட்டைகளை கடத்தி வரும் வாகன ஓட்டுநர்களை மடக்கி அவர்களை தாக்கி வெட்டிவிட்டு செம்மர கடத்தலில் ஈடுபட இருந்ததாக தெரியவந்தது.
இதன் காரணமாக விருதம்பட்டு போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து டாடா இண்டிகா கார் மற்றும் அதில் இருந்த உருட்டுக்கட்டை மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ராஜா என்கிற வசூல் ராஜா மற்றும் மோகன் என்கிற வெள்ளைமோகன் என்பவர்கள் மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி, ஆட்கடத்தல் மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன. இவர்களின் கூட்டாளிகளான வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சையது மன்சூர், கௌஸ் பாஷா மற்றும் சதீஸ்குமார் ஆகியோர்கள் மீது வேலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கொலை முயற்சி குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட ஐந்து நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
இந்த சம்பவத்தில் காட்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான போலீசார் விரைந்து செம்மரக்கட்டைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், துரிதமாக செயல்பட்டு கும்பலை பிடித்ததால் போலீசாரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது? - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம்!