வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வி.கே.தாமோதபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பத்மநாபன், லதாவுக்கு நிர்மல்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பக்கத்து வீட்டு பெண்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக லதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஊர் நாட்டாமை சலோபரி பஞ்சாயத்தைக் கூட்டி இந்த வழக்கை வாபஸ் வாங்கும்படி லதாவை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், லதா இந்த வழக்கை வாபஸ் வாங்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக அவர் குடும்பத்துடன், ஊர் பொதுமக்கள் யாரும் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், அவருடன் அன்னம், தண்ணீர் புழங்கக்கூடாது என்றும் ஊர் நாட்டாமை உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக ஊர் மக்கள் யாரும் தன்னிடம் பேசவில்லை என்றும், அரசு பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க விடுவதில்லை என்றும் லதா கண்ணீருடன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ஈடிவி பாரத் கடந்த 27ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.
ஈடிவி பாரத் செய்தியின் மூலம் இந்தத் தகவலை அறிந்து கொண்ட வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், வேப்பங்குப்பம் காவல்நிலைய ஆய்வாளரை தொடர்புகொண்டு ஊர் நாட்டாமையிடம் விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார். பின்னர், வேப்பங்குப்பம் காவல் துறையினர் நாட்டாமை சலோபரியிடமும், ஊர் நிர்வாகிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஈடிவி பாரத் செய்தியின் மூலம் தன்னுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்திருப்பதாக லதா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.