வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பிரபு என்பவரின் 16 வயது மகள் ரஞ்சனா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பொதுத் தேர்வில் 410 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் கூலி தொழிலாளியான பிரபு மது பழக்கத்திற்கு ஆளாகி தினம் தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மது பழக்கத்தினால் மாணவி ரஞ்சனாவின் தந்தை தினந்தோறும் மது அருந்திவிட்டு விட்டிற்கு வந்தபிறகு அவரது தாயுடன் தகராறில் ஈடுபடுவதால் மனமுடைந்த பள்ளி மாணவி, "என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தவும், என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்பொழுது காண்பேனோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்" என கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒடிசாவில் இருந்து சென்னை வந்த சிறப்பு ரயில்.. 133 பயணிகள் வருகை; 8 பேருக்கு சிகிச்சை என அமைச்சர் தகவல்!
இதனையடுத்து கூலி வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்த தாய், தனது மகள் தற்கொலை செய்துக்கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு அழுதுள்ளார். அவரின் அழும் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் பள்ளி மாணவி தற்கொலை குறித்து குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற குடியாத்தம் காவல்துறையினர் பள்ளி மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடியாத்தம் கிராமமக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல, நீங்கள் மன உளைச்சலில் இருந்தாலோ அல்லது தற்கொலை எண்ணம் தோன்றினாலோ ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையத்தை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு எண் - 044 24640050
இதையும் படிங்க: லிப்ட் கேட்ட பள்ளி சிறுவனிடம் பாஜக உறுப்பினர் பாலியல் சீண்டல் என புகார்.. சென்னையில் நடந்தது என்ன?