வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த பெரிய பாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவரது கணவர் முன்னாள் ராணுவ வீரரான வசந்த்குமார் இறந்துவிட்டார். கீதாவுக்கு ஒரே மகன் தாமு என்கிற தாமோதிரன் (14) உள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடையே மாணவன் தாமோதிரன் எந்நேரமும் கைப்பேசியில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபாடுடன் இருந்துள்ளார். ஒரே மகன் என்பதால் கீதாவும் அதட்டாமல் இருந்துவந்துள்ளார். அதன்படி வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் கைப்பேசியில் ஆன்லைன் விளையாடிக் கொண்டிருந்தார்.
நீண்டநேரமாக விளையாடிக் கொண்டிருந்ததை அடுத்து அவரது தாய் கீதா தாமோதிரனை திட்டியிருக்கிறார். பின்னர், நேற்று (ஆக.31) கீதா தூங்கியதும் மொட்டை மாடிக்குச் சென்று ஆன்லைனில் விளையாடியுள்ளார். இந்த நிலையில், இன்று (செப்.01) காலை நீண்ட நேரமாகியும் மகன் கீழே வராததால், தாய் கீதா மாடிக்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு தாமோதிரன் தற்கொலை செய்துகொண்டு சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த வேலூர் கிராமிய காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த தாமோதிரன் நன்றாக படிக்கக்கூடிய மாணவன் என்றாலும் பொதுவாக யாரிடமும் பேசாமலும், பழகாமலும் எப்போதும் தனிமையில் இருந்து வந்தது தெரியவந்தது.
ஆறு மாதங்களாக அடிக்கடி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த அவர் வியாழக்கிழமை (ஆக.31) இரவு ஆன்லைன் விளையாட்டில் தோல்வியடைந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து, தாமோதிரன் கைப்பேசியை காவல் துறையினர் ஆய்வு செய்ததில் கைப்பேசி முழுவதுமே ஆன்லைன் விளையாட்டுகள் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பூஜை எனக்கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. தெலங்கனாவில் நிகழ்ந்த பகீர் சம்பவம்.. வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?