கரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் அனுமதியில்லாமல் குழந்தை திருமணங்கள் நடப்பது அதிகரித்துள்ளன.
இதனை பல்வேறு வழிகளில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், இரண்டு நாள்களில் (ஆக 21& 22) மட்டும் வேலூர், கே.வி.குப்பம், கருகம்புத்தூர், காவேரிபாக்கம், வாணியம்பாடி, அரப்பாக்கம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணங்களை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்தனர்.
இப்படி, மீட்கப்படும் சிறுமிகள் கரோனா பரிசோதனைகக்கு உள்படுத்தப்பட்டு பின்னர் அரசு, அரசு உதவி பெறும் காப்பகங்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.
பின்னர், அவர்களுக்கு உளவியல் நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியதில் இருந்து தற்போதுவரை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 130 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குழந்தைத் திருமணமும்... காட்டிக்கொடுத்த டிக்டாக்கும்...! - இளைஞர் கைது!