ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனை 75 வாரங்களாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.
அந்த வகையில் வேலூரில் மத்திய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்தியா சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு பல்வேறு நிகழச்சிகள் நடைபெற்றன. வேலூர் கோட்டை பகுதியில் உள்ள மக்கான் பகுதியில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் காகிதப் பட்டறையில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வீரய்யா வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்து அவரின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சிப்பாய் புரட்சி நினைவு தூணிலிருந்து தொடங்கிய ஊர்வலம் வேலூர் கோட்டையில் நிறைவடைந்தது. அங்கு ஓவியக் கண்காட்சி மற்றும் சுதந்திரம் குறித்த தியாகத்தை போற்றும் விதமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு 1806 ஆம் ஆண்டு ஜுலை பத்தாம் நாள் முதல் சிப்பாய் புரட்சி இந்தக் கோட்டையில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.