வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இன்று மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையிலான குழுவினர் வேலூர் மாநகராட்சி மண்டலம் இரண்டிற்குள்பட்ட சுண்ணாம்புகாரத் தெருவில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரத்தன் சிங் என்பவருக்குச் சொந்தமான மகாவிர் & கோ என்ற நெகிழிப் பொருள்கள் விற்பனை கடையில், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று டன் நெகிழியை பறிமுதல்செய்த அலுவலர்கள், கடை உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.