காட்பாடி பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு லத்தேரி காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்துள்ளனர். அப்போது சுரேஷ் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க : நிர்வாணமாக திருட முயற்சித்த இளைஞர் - பகீர் சிசிடிவி காட்சி!
இந்த விசாரணையில், ஆலங்கனேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்துகொண்டு காட்பாடி, லத்தேரி, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியதாக சுரேஷ் ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இவர்கள் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்திருந்த 26 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இருசக்கர வாகனத்தை இழந்தவர்கள் அதனுடைய அசல் புத்தகத்தைக் காண்பித்து வண்டியைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் சுரேஷ் , வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க : கடையில் கொள்ளை: கைது செய்யப்பட்ட கிளிக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!