வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் (TSO) தேவி, சிறப்பு வருவாய் ஆய்வாளர் (Special RI) ஜோதி ராமலிங்கம் ஆகியோர் தாழையாத்தம் கிராமத்தில் நேற்று (நவ. 04) இரவு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில், கர்நாடக பதிவெண் கொண்ட லாரி ஒன்று சாலையில் சென்றது. அதனைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் தேங்காய் மூட்டைகளுக்கு அடியில் 381 மூட்டைகளில் சுமார் 19 ஆயிரத்து ஆறு கிலோ எடையுள்ள ரேசன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது.
அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே லாரி ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார். பறிமுதல்செய்யப்பட்ட அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியைப் பறிமுதல்செய்து, கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:மேலே வாழைக்குலைகள், உள்ளே 4 டன் ரேஷன் அரிசி: லாரியை மடக்கிப் பிடித்த அலுவலர்கள்