சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், டெடி- 2, எக்ஸ் மீட்ஸ் ஓய், தங்கலான் ஆகிய பட தயாரிப்பு பணிக்காக, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 99 கோடியே 22 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
இதில் 45 கோடி ரூபாயை திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா, மீதமுள்ள 55 கோடி ரூபாயை திருப்பி வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூர்யா VS தனுஷ்... ஒரே நாளில் வெளியாகும் படங்களால் சூடுபிடிக்கும் கோலிவுட்!
மேலும், "இந்தத் தொகையை திருப்பித் தராமல் நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணையில் உள்ள நிலையில், இன்று (நவ.08) நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகை முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டதாக கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கங்குவா படத்தை வெளியிட அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்