வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு, கோட்டையூர் கிராமத்தில் இருந்து பெண்கள் 100 நாள் வேலைக்குச் செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று (செப்.09) அரசு பேருந்தில் 100 நாள் வேலைக்குச் செல்வதற்காக பெண்கள் ஏறிய போது பேருந்து ஓட்டுநருக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஓட்டுநர், பேருந்தை தாறுமாறாக ஓட்டிச் சென்றதாகவும், பேருந்தில் பயணம் செய்த 13 பெண்கள் உள்பட பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்படிகிறது. இதனையடுத்து காயம் அடைந்த பெண்களை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோட்டையூர் கிராமத்தில் 100 நாள் வேலைக்குச் சென்ற பெண்கள், அரசு பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பேர்ணாம்பட்டு காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் 100 நாள் திட்ட வேலைக்குச் செல்லும் பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். தொடர்ந்து அச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அச்சம்பவம் குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் கூறுகையில், “பெண்கள் பேருந்து நிறுத்தம் இருக்கும் இடத்தில் நிற்காமல் ஆங்காங்கே நின்று பேருந்தை நிறுத்தி ஏறுகின்றனர். அவர்களை பேருந்து நிற்பதற்காக அமைக்கப்பட்ட இடத்திலிருந்து ஏறுமாறு கூறியதால் பெண்கள் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்” என்றார்.
இருப்பினும் இரு தரப்பினரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பெண்கள் கூறும்போது, 100 நாள்கள் வேலை செய்யும் பெண்கள் மற்றும் ஆண்களும் வயதானவர்களாக இருப்பதாகவும், அவர்களிடம் பொறுமையாக எடுத்துக் கூறி பேருந்து ஓட்டுநர் தன்னுடைய நிலைமையை எடுத்து
சொல்லி இருக்கலாம் என தெரிவித்தனர்.
மேலும், அதை விடுத்து வயதானவர்கள் என்று கூட பாராமல் பேருந்தை வேகமாகவும், தாறுமாறாகவும் ஓட்டிச் சென்று, நடுவழியிலேயே இறக்கி விட்டுச் சென்றது மிகவும் வேதனையாக இருப்பதாக கூறினர். வயதானவர்கள் என்றுகூட பார்க்காமல் அரசு பேருந்து ஓட்டுநர் ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கியது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
தொடரந்து அதிவேகமாகவும், தாறுமாறாகவும் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது போக்குவரத்து துறையும், காவல் துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கேடுக்கொண்டனர்.