வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் வாணியம்பாடி வட்டாட்சியர் மற்றும் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கு அப்பகுதியில் சோதனையிட உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வட்டாட்சியர் முருகன், வட்ட வழங்கல் அலுவலர் குமார் ஆகியோர் ஷாகிராபாத் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
சந்தேகத்தின் பேரில் நியாயவிலைக் கடை அருகில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து சோதனை செய்தபோது சுமார் 1.5 டன் அளவில் 20 மூட்டைகளில் ரேசன் அரசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேஷன் அரிசி மூட்டைகளை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நியாய விலைக் கடையின் அருகிலேயே அரிசி மூட்டைகளை பதுக்கிவைத்திருந்ததால் கடையின் விற்பனையாளரிடமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
பத்திரம் மாற்றி அமைக்க ரூ.1 லட்சம் லஞ்சம் - சார் பதிவாளர், எழுத்தர் கைது