திருச்சி: மணப்பாறை அருகே சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 16 வயது மகள் கடந்த 20-ஆம் தேதி வீட்டில் இருந்த நிலையில், திடீரென மாயமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் மரவனூர் பகுதியில் வசித்து வரும் கந்தசாமி மகன் பிரச்சன்னாவெங்கடேஷ் (19) என்ற இளைஞர் சிறுமியை கடத்தி சென்றிருப்பதாக சந்தேகப்படுவதாக கூறி பெற்றோர், உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறைத் தலைவர் ஆர் பிருந்தா, தனிப்படைகள் அமைத்து சிறுமியை தேடும் பணியை மேற்கொண்டார். கடந்த 8 நாள்களாக பல்வேறு இடங்களில் சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில், திருப்பூர் அருகே திருமூர்த்தி அருவியில் சிறுமி மற்றும் பிரச்சன்னா வெங்கடேஷனை தனிப்படையினர் சுற்றி வளைத்தனர்.
பின்னர் அங்கிருந்து சிறுமியை மீட்டு, இளைஞரை கைது செய்து மணப்பாறை அழைத்து வந்தனர்.
இந்நிலையில் காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இளைஞன் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை கடத்தியது, பாலியல் அத்துமீறல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் பிரச்சன்னாவெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் உயிரிழப்பு