திருச்சி: மணப்பாறை அடுத்த மலையாண்டிபட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் சந்தோஷ் (22). இவர், மணப்பாறை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். கடந்த ஆறுமாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த இவர், வீட்டிலுள்ள பணம், நகைகளை வீட்டிற்கு தெரியாமல் எடுத்துச் சென்று அதன் மூலம் ரம்மி விளையாடியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (அக்.4) வீட்டிலிருந்த ½பவுன் மோதிரத்தைக் காணவில்லை என அவரது பெற்றோர் கேட்டதற்கு, நகையோடு வருகிறேன் என கூறி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவன் சந்தோஷ் தனது செல்போனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸாப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
இந்நிலையில், மணப்பாறை கீரை தோட்டம் என்ற இடத்தில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மாணவனின் பெற்றோர் அது தனது மகன் சந்தோஷ் தான் என ரயில்வே காவல்துறையிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மணப்பாறை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை!