திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகேயுள்ள சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சுரேஷ் (24). இவர், நேற்று (டிசம்பர் 15) மாலை வயல்வெளிப் பகுதியில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றுக்குள் ஆடு ஒன்று தவறி விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ், ஆட்டை காப்பாற்ற முடிவுசெய்து கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினார். ஆனால், 10 அடி ஆழம் இறங்கிய நிலையில் கை வழுக்கி கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், துவரங்குறிச்சி தீயணைப்புத் துறை வீரர்களின் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த ஆடு மற்றும் சுரேஷை பத்திரமாக மீட்டனர். தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து இடுப்பு பகுதியில் படுகாயமடைந்திருந்த சுரேஷை சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.