திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தாதக்கவுண்டம்பட்டி அடுத்த கோட்டப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பொடங்குப்பட்டியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் தனது அண்ணனுடன் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்துள்ளார்.
செல்வராஜ் தனது அண்ணன் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதனை ஒருமுறை நேரில் கண்ட திவ்யா செல்வராஜைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், திவ்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவ்வப்போது தனது பெற்றோர்களிடம் கூறி வந்ததாகத் தெரிகிறது.
மேலும் பிரச்னையானது முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததால் மனமுடைந்த திவ்யா தனது பிறந்தநாளான ஜூன் 15ஆம் தேதியன்று விஷத்தன்மையுள்ள பச்சிலையை வேகவைத்து குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் வீட்டார் திவ்யாவின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து திவ்யாவை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து திவ்யாவின் கணவர் செல்வராஜ், அவரது அண்ணன் மனைவி நித்யா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயிரிழந்த பெண் வீட்டார் மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.