திருச்சி: உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு 'தமிழ்' என்ற எழுத்தை டாட்டூவாக 500 பேருக்கு வரைந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட டாட்டூ கலைஞர் முத்துக்குமாரின் முயற்சிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இன்று பிப்.21 ஆம் தேதி 'உலக தாய்மொழி தினம்' (International Mother Language Day) உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. தாய்மொழியைப் போற்றும் வகையில், அவரவர் தாய்மொழியினை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் தாய்மொழி தினத்தை முன்னிட்டு திருச்சியைச் சேர்ந்த டாட்டூ கலைஞரான முத்துக்குமார் என்பவர் தனது தாய்மொழியான 'தமிழ்மொழி'யை உலக அரங்கில் பெருமைப்படுத்தவும் எண்ணினார்.
இதற்காகத் தனது டாட்டூ கலையின் வாயிலாக 'தமிழ்' என்ற எழுத்து வடிவத்தை 500 பேருக்கு இலவசமாக உடலில் டாட்டூவாக வரைந்து அதன்மூலம் தாய்மொழியான தமிழை உலகிற்கு உணர்த்திடும் வகையில் உலக சாதனையினை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் நடந்த இந்த உலக சாதனை நிகழ்வில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் வந்திருந்து தங்களது கைகள் மற்றும் உடலில் தமிழ் என்ற எழுத்தை 2 அங்குலம் அளவிற்கு டாட்டூவாக பொறித்துக்கொண்டு சென்று வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய டாட்டூ கலைஞர் முத்துக்குமார், 'இதுவரையிலும் தனது தாய்மொழிக்கு என எவரும் தனிசாதனைகளை நிகழ்த்தாத பட்சத்தில் தாய்மொழியான தமிழை டாட்டூவாக வரைந்து தமிழர்களையும், தமிழையும் பெருமைப்படுத்துவதன் மூலம் இந்த சாதனை நிச்சயம் அங்கீகரிக்கப்படும் எனவும் எனவே, அனைவரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த சாதனை நிகழ்வானது நடுவர்களின் மேற்பார்வையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (Indian Book of Records) சாதனை புத்தகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இரட்டை இலை தோற்கும்.. விரக்தியின் உச்சத்தில் ஓபிஎஸ்? - அதிமுக அரசியல் நிலவரம் என்ன?