திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குதிரைகுத்திப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் 100 பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பணியிடத்திற்கு வியாபாரி மூலம் கொண்டுவரப்பட்ட வேம்பு மரக்கன்றுகளை 30 ரூபாய்க்கு பணியாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு மரக்கன்றுகள் வாங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியதாக ஊராட்சி செயலாளர் வேலுச்சாமி, பணித்தள பொறுப்பாளர் பணியாளர்களை வாங்குமாறு வற்புறுத்தியிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, இது மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி உத்தரவு எனவும், மரக்கன்றுகளை பணம் கொடுத்து வாங்கினால்தான் நாளை முதல் வேலை தர முடியும் என்றும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. இதற்கு அஞ்சி சுமார் 30 பேர் மட்டுமே மரக்கன்றுகளை வாங்கினர்.
மீதமுள்ள 70 பேர் மரக்கன்றுகளை வாங்க பணம் இல்லை என கூறியும், குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் இதை எப்படி வளர்ப்பது என்றும் மரக்கன்றுகளை வாங்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை பணிக்கு சென்ற தொழிலாளர்களில் மரக்கன்றுகளை வாங்க மறுத்தவர்களுக்கு பணித்தள பொறுப்பாளர் வேலை அளிக்க மறுத்துள்ளார். இதனால் பணியிடத்திலேயே பிற்பகல் வரை காத்திருந்து, பின் வேலை நேரம் முடிந்தவுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, அங்கு வந்த ஊராட்சி செயலாளரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர் வேலுச்சாமி, மரக்கன்றுகளை வாங்குவது அவரவர் விருப்பம் என்றும், பணம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாகவும் கூறி தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த இடத்திலிருந்து பணியாளர்கள் கலைந்து சென்றனர்.