திருச்சி மாவட்டம் துறையூர் கோவிந்தபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், புவனேஸ்வரி என்ற மகளும், மகேந்திரன் என்ற மகனும் உள்ளனர். முருகேசன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏஜெண்டுகள் மூலம் சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்காக இரண்டு லட்சம் ரூபாய் ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
முருகேசன் வேலைக்குச் சென்ற பின் தனது குடும்பத்தாருக்கு பணமும் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், சவுதி அரேபியாவில் உள்ள ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டபோது அவர்களும் முறையாக பதில் அளிக்காமல், இந்திய தூதரகம் மூலம் பேசும்படி கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளனர்.
இந்நிலையில் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி மகேஸ்வரியும், அவரது மகள் புவனேஸ்வரியும் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அப்போது மகேஸ்வரி கூறுகையில், ’எனது கணவர் சவுதி அரேபியாவுக்குச் சென்று மூன்று வருடங்கள் ஆகியும் அவரிடமிருந்து ஒரு போன்கூட இதுவரை வரவில்லை. ஏஜெண்டுகளிடம் கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. இதனால் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே சவுதி அரேபியாவில் சிக்கியுள்ள எனது கணவரை மீட்டுத்தர வேண்டும்’ என்றார்.