திருச்சி: திமுக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்தது. அதன்படி சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து இந்த வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2100 பயனாளிகளுக்கு, நேரடியாக அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் வங்கியில் பணம் எடுப்பதற்கான டெபிட் கார்டுகளை வழங்கினர்.
இதையும் படிங்க: தமிழக திருப்பதியில் பிரம்மோற்சவ பெருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்!
இந்நிலையில், திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், திடீரென நூற்றுக்கணக்கானோர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பெறுவதற்காக குவிந்தனர். மேலும், அவர்கள் தங்களுக்கு கைபேசியில் குறுஞ்செய்தி வந்தும் ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.
ஒரே நேரத்தில் வங்கியில் ஏராளமானோர் திரண்டதால், வங்கியின் நுழைவு வாயிலை ஊழியர்கள் பூட்டினர். இதனால் பெண்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வங்கி கணக்கு புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களுக்கு ரூ.1,000 வந்துவிட்டதா? இல்லையா? என்று பார்த்து கூறினார்கள்.
மேலும், தாங்கள் வீட்டில் சிறு குழந்தைகளை விட்டு வங்கிக்கு வந்தால் அவர்கள் த்ங்களை அவமரியாதையுடன் நடத்துவதாக மக்கள் குற்றம் சாட்டினர். வயதானவர்களும் நீண்ட நேரம் வந்து காத்திருந்தால் சிறிது நேரம் வங்கியின் வாசலில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, சிலருக்கு ஆதார் எண் அடிப்படையில் பயன்பாடு இல்லாத வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதாகவும் கூறிச்சென்றனர்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி எதிரொலி : தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்..!