மணப்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட காடைப்பிச்சம்பட்டி வனப்பகுதியில் காட்டெருமை,மயில்,குரங்கு,நரி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகள் தங்களுக்கான உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன் தினம் (ஜூலை 20) மாலை முத்தழகம்பட்டியைச் சேர்த்த தனிநபருக்குச் சொந்தமான ஐம்பது அடி ஆழ கிணற்றுக்குள் காட்டெருமை ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மணப்பாறை வனச்சரக அலுவலத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறிது நேரத்திலேயே இருளத்தொடங்கியதால் காட்டெருமையை பின்னர் மீட்கலாம் என்றிருந்த நிலையில் நேற்று (ஜூலை 21) காலை கிணற்றுக்குள் இருந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.
இதனையடுத்து இறந்த காட்டெருமையின் உடலை தீயணைப்பு வீரர்களின் உதவியோடு கிணற்றுக்குள் இருந்து மீட்டு, கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூராய்வு செய்யப்பட்டு வனப்பகுதியின் அருகிலேயே ஜேசிபி இயந்திரம் மூலம் குழிதோண்டி அடக்கம் செய்தனர்.
இது குறித்து பேசிய அப்பகுதி வனவிலங்கு ஆர்வலர்கள், ”இரவு நேரங்களில் உணவுக்காக கிராமங்களுக்குள் வரும் காட்டெருமைகள் வனப்பகுதியை ஒட்டி முள்வேலி அமைக்கப்படாமல் இது போன்று பாதுகாப்பற்ற முறையில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து அதிகமாகியுள்ளது. அதனைத் தடுக்க வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தனிநபருக்குச் சொந்தமான கிணறுகளுக்கு முள்வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து வழிவகை செய்திட வேண்டும்” என்றனர்.