தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், இன்று சுவாமி சங்கரதாஸ் தலைமையிலான அணியினர் திருச்சியில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
இதையடுத்து அந்த அணியின் சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா, நடிகை ஆர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வரை நாங்கள் பாண்டவர் அணியில் தான் தொடர்ந்து இருந்தோம்.
ஆனால் அங்கு பல தவறுகள் நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த அணியில் உள்ள இரண்டு, மூன்று பேர் மட்டுமே அங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் தலைமையை அவர்கள் தட்டிக்கேட்கவில்லை. அதனால் தான் தனி அணியாக போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எங்கள் அணி வெற்றிபெற்றால் நாடக நடிகர்களுக்கு ரேஷன் திட்டம், உறுப்பினர் சந்தாவை சங்கமே செலுத்துவது, ஆறு மாதத்தில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பது, சேலம், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் முதியோர் இல்லம் அமைப்பது போன்ற பல நல்ல விஷயங்களை செய்வதாக வாக்குறுதிகளை அளித்துள்ளோம். அதேபோல் மீண்டும் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்களை தொந்தரவு செய்து நடிகர் சங்க கட்டடத்திற்கு நிதி திரட்ட மாட்டோம். சொந்த நிதியிலிருந்து 6 மாதத்தில் கட்டடத்தை கட்டி முடிப்போம்” என்றனர்.