முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக திருச்சி மாவட்ட செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, திமுக எம்எல்ஏ-க்கள் ஸ்டாலின் குமார், சவுந்திரபாண்டியன், மாநகரச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் இன்று அம்மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்தனர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் நடத்திய ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தில் வரப்பெற்ற மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர்.
பின்னர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்கீழ், திருச்சி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 375 மனுக்கள் வரப்பெற்றன. இதில் தீர்வு கண்டது போக, சுமார் 8000 மனுக்கள் தீர்வு காண முடியாத நிலையில் உள்ளது. இதனை தீர்க்க, அந்த மனுக்களை இன்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளோம்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 16 லட்சம் பேருக்கு, திமுக சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில், திருச்சி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக தினமும் 5,000 பேருக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அமைச்சர்கள் இத்தகைய உதவிகளை செய்து இருந்தால், எங்களுக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கோரிக்கை மனுக்கள் வந்திருக்காது.
மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக தான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். திருச்சி மாவட்டத்திலுள்ள 4 எம்எல்ஏக்கள் சார்பில் முடிந்த உதவி செய்து வருகிறோம். முழு மதுவிலக்கு தேவையா? இல்லையா? என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கரோனா: அதிக பாதிப்புக்குள்ளான ஐந்து மாநிலங்கள்