திருச்சி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிறைவு பெற்றன. இதில் தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் 26 பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிடைச் சேர்ந்த ஐந்து பேர் கலந்து கொண்டனர்.
ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் பெற்றது. 88 பதக்கங்களுடன் சீனா 2ஆவது இடத்தை பெற்றது. போட்டிகளை நடத்திய ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் முறையே மூன்றாவது இடத்தை பிடித்தது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என ஏழு பதக்கங்களுடன் இந்தியா 48 ஆவது இடத்தை பெற்றது.
ஒலிம்பிக்கில் தமிழர்
ஒலிம்பிக் போட்டியில் திருச்சி லால்குடியைச் சேர்ந்த தடகள வீரர் ஆரோக்கியராஜ் 4×400 ஆடவர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார். இந்நிலையில் இன்று (ஆக.11) ரயில் மூலம் திருச்சி திரும்பினார். இவருக்கு திருச்சி ரயில் நிலையத்தில் மக்கள் சக்தி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்கங்கள் ஆரோக்கியராஜுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரசு உதவ வேண்டும்
அதன் பின் செய்தியாளர்களிடம் ஆரோக்கியராஜ் கூறுகையில், " ஒலிம்பிக் போட்டியின் களம் வேறு மாதிரியாக உள்ளது. அது போன்ற களத்தில் விளையாட இந்தியாவில் நல்ல தரம் வாய்ந்த களமும், பயிற்சியும் அதிகம் தேவைப்படுகிறது. ஒலிம்பிக்கில் வெற்றி பெறும் வாய்ப்புகள் இருந்தும், சின்னச் சின்ன தவறுகளால் அது கிடைக்காமல் போய்விட்டது. அடுத்து வரும் ஒலிம்பிக்கில் கட்டாயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "இந்தியாவில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை அடையாளப்படுத்த ஆளில்லை. ஒலிம்பிக்கில் சென்று நிற்பதற்கே தனியாக ஒருங்கிணைக்கும் சக்தி தேவைப்படுகிறது. எனினும் எதிர்காலங்களில் வீரர்கள் அஞ்சாமல் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சியின் போது எங்களுக்கான உணவு உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் பணம் செலவாகிறது. அதற்கு அரசு உதவி செய்தால் சிறப்பாக இருக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்... அமெரிக்கா முதலிடம், 48ஆவது இடத்தில் இந்தியா!