திருச்சி: மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நகர் மன்ற வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்டோர் நேற்று (பிப்ரவரி 14) மாலை முதல் இரவு வரை தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அன்பில் மகேஷ், "உங்களது பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம், அதற்காகத்தான் நாங்கள் உங்களைத் தேடிவந்திருக்கிறோம். மக்கள் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள்.
எது ஆளும் கட்சி, எது எதிர்க்கட்சி எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் வேலை நடக்கும் என்று நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள். இருந்தாலும் உங்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பது எங்கள் கடமை. முதலமைச்சர் ஸ்டாலின் எங்களிடம் சொன்னபோது மக்களைச் சந்தித்து நீங்கள் வாக்குச் சேகரிக்கும்போது எதிர்க்கட்சியினரைத் திட்டியோ அல்லது குறை கூறியோ வாக்குச் சேகரிக்க வேண்டாம்.
நாம் மக்களுக்குச் செய்த நலத்திட்டங்களைக் கூறி வாக்குச் சேகரித்தாலே போதும் என்று கூறினார். பல நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவிலேயே நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயர் வாங்கியவர் நமது முதலமைச்சர்.
அதை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் மக்களுடைய கோரிக்கைகள், தேவைகளை என்ன என்பதை அறிந்து அதை உடனடியாகத் தீர்த்துவைக்கும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால்தான் அந்த நல்ல பெயரை நாம் தக்க வைத்துக்கொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய எம்பி ஜோதிமணி, "முதலமைச்சர் முன் களப்பணியாளராக நின்று மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்பதைப் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு நல்லாட்சித் தொடர வேண்டும்.
அதேபோல் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு பாஜக எப்படி விரோதமாக இருக்கிறது என்று பேசி தமிழ்நாட்டின் குரலாய் ஒலித்திருக்கிறார். அந்த அளவுக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டிருக்கிறது. அந்த அக்கறைக்கு அன்பு செலுத்தும் வகையில் வாக்களியுங்கள்" என்று பேசினார்.