திருச்சி: வினை தீர்க்கும் விநாயகன், மும்முதற் கடவுள் என கருதப்படும் விநாயகரின் பிறந்தநாள் விழாவை, நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகையாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 200 இடங்களுக்கு மேலாக விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
குறிப்பாக திருச்சி மாநகரத்தில் 360 இடங்களுக்கு மட்டுமே சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக நேற்று (செப். 20) இரவு அனைவரும் காவேரி ஆற்றங்கரை நோக்கி புறப்பட்டுச் சென்றனர். விநாயகர் சிலையை கரைக்க வருபவர்களுக்கு காவிரி ஆற்றின் பாலத்தில் இருபுறங்களிலும் தடுப்புகள் வைத்து கட்டப்பட்டிருந்தது.
காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நின்று விநாயகர் சிலையை கரைக்க வேண்டுமென ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து போலீசார் அறிவுறுத்தி வந்தனர். அதன்படி வரும் அனைத்து விநாயகர் சிலைகளையும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் கரைத்து சென்றனர். எந்த விதமான ஒரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வண்ணம் காக்க காவிரி பாலம் முழுவதும் பேரிகார்டுகள், கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் 50 சிசிடிவி கேமராக்களை பொருத்தி, காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்து குடும்பத்துடன் சிறிய அளவிலான சிலைகளை கரைக்க வரும் பொதுமக்கள் உடனடியாக சிலைகளை ஆற்றில் வீசிவிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து காவலர்கள், போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் முதலுதவி செய்வதற்கான மருத்துவ குழு அடங்கிய குழுக்களையும், அப்பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். இதனால் பொது மக்கள் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் பிள்ளையார் சிலைகளை எடுத்துக்கொண்டு வந்து காவிரி ஆற்றில் கரைத்து விட்டு, கோஷங்களை எழுப்பிச் சென்றனர். இதனால் காவேரி பாலமே விழாக் கோலம் பூண்டது போல் காட்சி அளித்தது.
விநாயகர் சிலையை கரைக்கும் அனைவரும் சிலைகளை கரைத்துவிட்டு மகிழ்ச்சியாக சென்றனர். விநாயகர் சிலைகளை கரைப்பதை பார்ப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காவேரி பாலத்தில் கூடியதால் திருச்சி காவேரி பாலம் களைகட்டி காணப்பட்டது. இந்த நிகழ்விற்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில், சுமார் ஆயிரத்து 850 போலீசார் திருச்சி மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. சட்டமாக இவ்வளவு நாளாகுமா? முழுத் தகவல்!