திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுகமணி மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் குமார். இவர் சேதுரப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்றிரவு (மே.13) பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் மேம்பாலத்தில் பின்னால் வந்த மினிடோர் வேன் வேகமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![சாலை விபத்தில் உயிரிழந்த குமாரின் புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-04-vao-death-script-photo-7202533_14052020084456_1405f_1589426096_220.jpg)
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வேன் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் இறந்த கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கு கற்பகம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மேலும், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கரோனா நிவாரண அரிசி கடத்தல் - வைரல் வீடியோ