திருச்சி: வித்யா என்றால் கல்வி. கல்வி கற்கத் தொடங்குவதை வித்யாரம்பம் என்பர். வித்யாரம்பம் என்பது ஒரு இந்து சமய சடங்காகும். இது பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கேரளம், தமிழ்நாடு, கடலோர கர்நாடகம் போன்ற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புறக் கலை போன்றவை கற்பிப்பதற்குத் துவங்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு எழுத்துக்களைக் கற்பிக்கும் முக்கியமான விழாவாக உள்ளது. தமிழ்நாட்டில் இதை முதல் எழுத்து என்று அழைக்கின்றனர்.
வித்யாரம்பம் ஒரு அழகான சடங்கு மற்றும் ஒரு இந்து பாரம்பரியம். இந்த விழாவில் குழந்தைகள் அறிவு உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். சரஸ்வதி பூஜை தினத்தின் மறுநாள் விஜய தசமியில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியைத் தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை இன்று அளவிலும் மக்களிடம் உள்ளது. இதற்காகவே, கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டி இருந்தாலும் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினம் வரும் வரை காத்திருக்கப் பள்ளிகளில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது.
கல்வி அறிவாற்றலை அருளும் தெய்வமாக விளங்கும் சரஸ்வதிக்குத் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே சன்னதிகள் உள்ளன. அந்த வகையில், திருச்சி நம்பர் 1 டோல்கேட் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மும்மூர்த்திகள் ஸ்தலமான உத்தமர் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி ஆலயத்தில், ஒவ்வொரு விஜயதசமியின் போதும் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் கல்வி துவக்க நிகழ்ச்சியை நடத்தி பின்னர் பெற்றோர்கள் பள்ளியில் சேர்ப்பார்கள்.
அந்த வகையில் இன்று (அக்.24) காலை முதலே உத்தமர் கோயிலில் உள்ள சரஸ்வதி சன்னதியின் முன்பாக நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் வருகை தந்தனர். பின்னர், குழந்தைகளைக் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்கின்ற எழுத்தை எழுத வைத்து வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பயிற்றுவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நெல்மணியில் எழுத்து பழகும் பிஞ்சு கைகள்.. தருமபுரியில் கோலாகலமாக நடந்த வித்யாரம்பம்!