திராவிடர் கழகம் சார்பில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் சமூக நீதி மாநாடு நேற்றிரவு நடைபெற்றது. மாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசிய கி. வீரமணி, “குடியுரிமை திருத்தச் சட்டம், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்தல், சத்துணவுத் திட்டம் பறிப்பு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் மார்ச் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.
இந்தப் போராட்டத்தில் திராவிடர் கழகம் மட்டுமின்றி ஒத்த கருத்துள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும். பாஜகவின் உத்தரவுகளைத் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி அப்படியே அமல்படுத்திவருகிறது.
நவரத்தினங்களான பொதுத் துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக மத்திய அரசு விற்பனைசெய்துவருகிறது. இந்தியா விலைக்கு உள்ளது என்ற ஒரு அறிவிப்புதான் இன்னும் வெளிவரவில்லை. மற்றபடி அனைத்தையும் ஒவ்வொன்றாக விற்பனைசெய்துவருகிறது.
அரசியலமைப்பின் அடிக்கட்டுமானம் உருவி எடுக்கப்படுகிறது. அரசியல் கட்டமைப்பை மாற்றியமைக்கும் உரிமை நீதிமன்றங்களுக்குகூட கிடையாது. ஆனால் தற்போது அதையும் மத்திய அரசு அசைத்துப் பார்க்கிறது. இதற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.
இதையடுத்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானது கிடையாது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வி.பி. சிங் அமல்படுத்தியபோது அதற்கு எதிராக பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் போராட்டம் நடத்தின.
இதன் தொடர்ச்சியாகத்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 1998ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது முதலே பாஜகவுக்கு ஏறுமுகமாகத்தான் உள்ளது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கிலும் பாஜக விரும்பிய தீர்ப்புதான் கிடைத்துள்ளது. மதச்சார்பின்மை, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை குப்பையில் வீசும் செயல் நடந்துவருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து காப்பாற்ற வேண்டும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தூண்டுவதாக அதிமுக அரசு குற்றஞ்சாட்டுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப்பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும். இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது கிடையாது. ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பிரச்னை ஏற்படுத்தக் கூடிய சட்டமாகும்” என்றார்.
திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா பேசுகையில், ”பாஜகவின் குட்டிக் கட்சியாக அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி செய்கிறது. பாஜக ஆளும் மாநிலங்கள்கூட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் அச்சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர் முதலமைச்சராக இருக்கிறார். இந்திய ஜனநாயகத்தை ஆட்சியாளர்களாக இருந்து நாம் காப்பாற்ற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை விவகாரம்: மகாராஷ்டிர கூட்டணி அரசில் கருத்து மோதல்