இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் 1965ஆம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமான தமிழர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகே உள்ளன. இங்கு, ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளாக அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனுசரித்து வருகின்றன.
இந்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி அதிமுக மாநகர், புறநகர் மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் இன்று திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் ரத்தினவேல், ப.குமார், எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகரன், பரமேஸ்வரி முருகன், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலம் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை அடைந்ததும் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வீரமரணமடைந்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆதரவாக வீரவணக்கம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், அக்கட்சியினர் ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் கம்யூனிஸ்ட், நாம்தமிழர் கட்சி உள்பட 16 அமைப்புகள் சார்பிலும் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க:'ரஜினி குறித்தெல்லாம் கருத்து கூறமுடியாது' - அமைச்சர் உதயகுமார்