திருச்சி: பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் மாதம் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குகிறது. 23ஆம் தேதி முதல் ஜனவரி 2023, 1ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழா நடைபெறும். 1ஆம் தேதி அன்று ஸ்ரீநம்பெருமாள் - நாச்சியாருடன் அருள்புரிவார்.
முக்கியத் திருநாளான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு 2ஆம் தேதி அதிகாலை 04.45 மணிக்கு நடைபெறும். இதில் ஸ்ரீநம்பெருமாள் இரத்தினங்கியுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
மேலும், 8ஆம் தேதி ஸ்ரீநம்பெருமாள் கைத்தல சேவையும் , 9ஆம் தேதி அன்று திருமங்கை மன்னன் வேடுபறி திருவிழாவும், 10ஆம் தேதி அன்று தீர்த்தவாரியும், 11ஆம் தேதி ஸ்ரீநம்மாழ்வார் மோட்சம் விழாவுடன் வைகுண்ட ஏகாதசி நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அறங்காவலர்கள் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடைபெற்றது. இந்த முகூர்த்தக்கால் நடும் விழாவில் பட்டர்கள், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Rajiv Gandhi murder Case: புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் விடுதலை!