வைகுண்ட ஏகாதசி: நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு! - திருச்சி மாவட்ட செய்தி
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவுபெற்றது
திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல் பத்து - ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும். கடந்த டிசம்பர் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் தொடங்கியது.
டிசம்பர் 23ஆம் தேதி முதல் 1ஆம் தேதி வரை பகல்பத்து திருவிழா தொடங்கி நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதேபோல கடந்த 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி நேற்றுவரை ராப்பத்து விழாவில் பத்து நாட்கள் திருமாமணி மண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முக்கிய திருநாளான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு 2ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்குத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இராப்பத்து திருநாளின் போது 9 நாட்கள் தினசரி திறக்கப்பட்டு வந்த பரமபதவாசல் நேற்று இரவு 10 மணியுடன் மூடப்பட்டது. 21 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் இன்று காலை நடந்தது.
காலை 6 மணிக்கு நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவத்தை முன்னிட்டு நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடிகளில் சரணமடைந்தார். பெருமாள் தனது மாலையை நம்மாழ்வாருக்கு அணிவித்து சகல மரியாதையுடன் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் பரவசத்துடன் வணங்கினர். இத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவுபெறுகிறது.
இதையும் படிங்க: Srirangam: வைகுண்ட ஏகாதசி - விமரிசையாக நடந்த தீர்த்தவாரி