சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, பெரம்பலூரைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் இளையராஜா இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதிய உலக சாதனை படைத்தார். இவருக்கு பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை புரிந்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதேபோல், திருச்சி உய்யகொண்டான் திருமலை மவுண்ட் லிட்ரா ஜி பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்திய வரைபடத்தில் நின்று யோகா செய்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்திய வரைபடத்தில் அமர்ந்து பத்மாசனம், பத்ம மயில் ஆசனம், வஜ்ராசனம், சித்தாசனம், கோமுகாசனம் உள்ளிட்ட 20 ஆசனங்களை 21 நிமிடத்தில் செய்து முடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சௌடாம்பிகா கல்வி குழுமத் தலைவர் ராமமூர்த்தி, பாஜக மாநில துணைத்தலைவர் காந்தி, ருத்ர சாந்தி யோகாலயா கிருஷ்ணகுமார், பதஞ்சலி உலக சாதனை புத்தகத்தின் முதன்மை நடுவர் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.