திருச்சி: மணப்பாறை அடுத்த இடையப்பட்டியான்பட்டி என்னும் இடத்தில் நேற்று நள்ளிரவில் (பிப்ரவரி 14) சமயபுரம் கோயிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே ஒட்டன்சத்திரத்திலிருந்து மணப்பாறைக்கு தக்காளி ஏற்றிவந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக பக்தர்கள் மீது மோதியது.
இதில் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு எம்ஜிஆர் பகுதியைச் சேர்ந்த சேகர், திருச்சி மாவட்டம் சீகம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை காவல் துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மேலும், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். படுகாயடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வேன் ஓட்டுநர் சிவசக்திவேலைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சர்ச்சையாக வெடித்த ட்வீட்; முன்பிணை கோரிய பாஜக நிர்வாகியின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு