திருச்சி ராமகிருஷ்ண மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ஜெயினுலாபுதீன், மாவட்ட ஜமாத்துல் உலமா சபை துணைத்தலைவர் உமர்பாரூக், வழக்கறிஞர் நூர்தீன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இதைத் தொடர்ந்து ஜெயினுலாபுதீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவை குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் கைது செய்யப்பட்டு, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய ஆயுள் தண்டனை கைதிகளை மதவேறுபாடு இன்றி, பாரபட்சமின்றி, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.
மேலும் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, பேரறிவாளன் ஆகியோரையும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.