திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எழில் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (38). ஏ.ஐ.பி.சி.இ.யூ ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனர். திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி என்ற தனியார் கல்லூரியை சேர்ந்த 6 பேராசிரியர்களுக்கு அந்த கல்லூரி ஊதியம் கொடுக்கவில்லை என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்தப் புகாரை ஆணையம், தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக திருச்சி தொழிலாளர் துணை ஆணையர் இந்த வழக்கை விசாரித்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை முடித்து தருமாறு தொழிலாளர் நீதிமன்றத்துக்கு புகார் கொடுத்த ஆசிரியர்கள் தரப்பில் கோரப்பட்டது. அதை துணை ஆணையர் ஏற்றுக்கொண்டார்.
அப்போது கல்லூரி தரப்பில் ஆஜராகியிருந்த உடற்கல்வி ஆசிரியர் கோவிந்தன் என்பவர் கார்த்திக்கிடம் தகராறு செய்து அவரைத் தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்த கார்த்திக்கிற்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோவிந்தன் மீது திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க தமிழ்நாஉ அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு முன்பு நேரில் சென்று வெளிப்படையாக புகார் கொடுத்தவர் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.