கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், அதனோடு இணைந்த பார்களும், விடுதிகளில் உள்ள ஏசி பார்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருச்சி உறையூர்- குடமுருட்டி சாலையில் கோணக்கரை சுடுகாடு அருகே உள்ள மதுபானக் கடையை நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான வகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக உறையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அதேபோல், திருச்சி பாலக்கரை பிச்சை நகரில் உள்ள மதுபான கடையை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான வகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக பாலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.