திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ஆண்டாள் யானை நேற்று (பிப்.28) தனது 45ஆவது பிறந்த நாள் கொண்டாடியது. 1979ஆம் ஆண்டு பிப்.28ஆம் தேதி பொள்ளாச்சி வனப்பகுதியில் பிறந்த யானைக்குட்டியை திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கி வளர்த்து வந்தார். அதன்பின் யானையை காரமடை அரங்கநாத சுவாமி கோயிலுக்கு தானமாக வழங்கினார்.
காரமடை கோயிலில் இருந்த போது, ரஜினிகாந்த் நடித்த படத்தில், அவருக்கு ஆசி வழங்கும் காட்சியில் இந்த யானை நடித்துள்ளது. அதன்பின், ஸ்ரீரீரங்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், இந்த யானையை முறைப்படி எழுதி வாங்கி, பின்னர் ஸ்ரீரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு தானமாக வழங்கினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு, ஆண்டாளாக வந்த யானை, 1986ஆம் ஆண்டு அக்.17ஆம் தேதி முதல், ரெங்கநாதருக்கு கைங்கர்ய சேவையை தொடங்கியது. ரெங்கநாதருக்கான முதல் சேவையிலேயே, தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து வந்த பாக்கியத்தைப் பெற்றது.
இந்நிலையில், நேற்று (பிப்.28) 45ஆவது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியது. அப்போது கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, மேலாளர் தமிழ்செல்வி, உதவி மேலாளர் சண்முகவடிவு மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட ஆண்டாள் யானைக்கு பல வகையான பழங்களை வழங்கினர். உற்சாகமாக அவற்றை உட்கொண்ட ஆண்டாள், அனைவருக்கும் இனிப்பு வழங்கி ஆசி வழங்கியது. ஆண்டாளுக்கு 'ஹேப்பி பர்த்டே' பாடலும் பாடி கொண்டாடப்பட்டது.
இதையும் படிங்க: முடி உதிர்வை தடுக்கும் "சக்கரவள்ளி கிழங்கு"