"தமிழக அரசே எங்கே எனது வேலை?" என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் மார்ச் ஐந்தாம் தேதி வரை ஒரு கோடி இளைஞர்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்றது.
அந்த வகையில் திருச்சி சோமரசம்பேட்டையில் மாவட்ட துணை தலைவர் ராஜா முகமது தலைமையில் கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலர் பாரதி தொடங்கிவைத்து கண்டன உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆனந்த், விவசாய அணி செயலாளர் துரைபாண்டியன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வக்குமார், திமுக ஊராட்சி செயலாளர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி, ”தமிழ்நாட்டில் 96 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்பற்ற காலங்களில் இளைஞர்களுக்கு நிவாரண நிதியாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கி, ரயில்வே உள்ளிட்ட பணிகளில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: டெல்லி வன்முறை... இறந்தவர் தந்தைதானா? மகளுக்கு சவால்