திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நந்தவனம் பகுதியில் 50 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய கூலி வேலை செய்பவர்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் கோயில் நிலத்தில் குடியிருந்தவர்கள் மாற்று ஏற்பாடாக நந்தவனம் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். ஆனால் தற்போதுவரை அவர்களுக்கு அடிமனை ரசீது வழங்கப்படவில்லை. அடிப்படைத் தேவைகளான சுகாதாரம், கழிப்பிடம், மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் சதீஷ் தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று (செப்.2) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர். தங்களது பகுதிக்கு அடிமனை ரசீது வழங்க வேண்டும். அடிப்படைத் தேவைகளை ஊராட்சி நிர்வாகம் மூலம் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சிவராசு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.