திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு இன்று (செப்.26) சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவரிடம் செல்போன் திருடியதாக கோயில் போலீசார் அரியலூர் மாவட்டம் ஓரியூர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (37) என்பவரை கைது செய்தனர். அதன்பின் அவர் சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதனிடையே காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு முருகானந்தம் சென்றுள்ளார். அதன்பின் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் பணியில் இருந்த காவலர் கழிவறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது முருகானந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி துணை கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், வருவாய் ஆய்வாளர் திவ்யா, கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சமயபுரம் போலீசார் தரப்பில், உயிரிழந்த முருகானந்தம் காவல் நிலையம் கழிவறையில் அவரது இடுப்பில் அணிந்திருந்த அரைஞாண் கயிற்றில் தூக்கிட்டு கொண்டார். அவர் மதுபோதைக்கு அடிமையானவர். கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்துவந்தவர். கடந்தாண்டு அவரது தாயை அடித்து கொலை செய்த வழக்கு அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்திருக்கும் நிலையில் இவ்வாறு செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய பெண்.. படுகாயம் அடைந்த சிறுமி