திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இதை முன்னிட்டு பக்தர்களின் நலனுக்காக அம்மனே பச்சைப் பட்டினி என்ற விரதமிருக்கும் நடைமுறை இங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரத நாட்களில் அம்மனுக்கு மாவு, கஞ்சி போன்றவை மட்டுமே படையலிடப்படும். இந்த வகையில் கடந்த 8ஆம் தேதி திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 5 வாரம் பூச்சொரிதல் விழா நடைபெறும்.
திருச்சி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அலங்கார வாகனங்களில் பூக்களைக் கொண்டு வந்து அம்மனுக்கு சாத்துவார்கள். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 20ஆம் தேதி முதல் சமயபுரம் கோயிலில் பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. அம்மனுக்கு பூஜைகள் மட்டுமே வழக்கம்போல் நடைபெற்றது. மேலும் கடந்த 8 மற்றும் 15ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் மட்டுமே பூச்சொரிதல் நடைபெற்றது. 22, 29ஆம் தேதிகளில் நடைபெற இருந்த பூச்சொரிதல் ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறயிருந்த கொடியேற்றமும், ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெறயிருந்த சித்திரைத் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் பக்தர்கள் ஏப்ரல் 5ஆம் தேதி காலை 6 முதல் 8 மணிக்குள் தங்கள் வீட்டிலேயே சமயபுரம் மாரியம்மன் படத்தை வைத்து நெய்வேந்திரமாக தயிர்சாதம், இளநீர், கஞ்சி, நீர்மோர், பானகம், ஆகியவற்றை படையலிட்டு மாலையை கழட்டி, காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவா? எங்களுக்கா?...சுதந்திரமாக நடமாடும் விழுப்புரவாசிகள்!