கரோனா தொற்று பரவலைத் தடுக்கும்வகையில், கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகள் இன்னல்களுக்கு ஆளாகினர்.
எனினும் முன்பதிவுக் கட்டணம் படிப்படியாகத் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு தற்போது ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுவருகின்றன. எனினும் முழு அளவில் ரயில் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாத நிலையில் கடந்த மார்ச் 22ஆம் தேதிமுதல் ரத்துசெய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவுக் கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள, திருச்சி சந்திப்பு ரயில்வே நிர்வாகம் தற்போது பயணிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
இதற்காக ஆறு தேதிகளை ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டு அறிவித்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட தேதிகளில் பயணத் தேதி வாரியாக பிரித்து முன்பதிவுக் கட்டணத்தை மீண்டும் வழங்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி,
- கடந்த மார்ச் 22ஆம் தேதிமுதல் 31ஆம் தேதிவரை பயணம்செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள் ஜூன் 1ஆம் தேதிமுதல் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதேபோல் ஏப்ரல் ஒன்றுமுதல் 14ஆம் தேதிவரை முன்பதிவு செய்திருந்தவர்கள் வரும் ஆறாம் தேதி முதல் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
- ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் 30 வரை முன்பதிவு செய்திருந்தவர்கள் வரும் 11ஆம் தேதி முதல் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
- மே ஒன்றாம் தேதிமுதல் 15ஆம் தேதிவரை பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தவர்கள் வரும் 16ஆம் தேதிமுதல் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
- மே 16ஆம் தேதிமுதல் 31ஆம் தேதிவரை முன்பதிவு செய்துவந்தவர்கள் வரும் 21ஆம் தேதிமுதல் கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
- ஜூன் ஒன்றுமுதல் 30ஆம் தேதிவரை பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தவர்கள் வரும் 26ஆம் தேதிமுதல் அந்தக் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் தகுந்த இடைவெளி உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி முன்பதிவுக் கட்டணத்தை மக்கள் திரும்பப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க : “கரோனா காலத்தில் ஊழல் செய்தால் உருப்படமாட்டீர்கள்” - திருநாவுக்கரசர் ஆவேசம்