திருச்சி தலைமை அஞ்சலகத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையம், நவீனமயமாக்கப்பட்ட மொத்த செயலாக்க மையம், பொதுச் சேவை மையம் ஆகியவற்றின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அதன் இயக்குநர் தாமஸ் லூர்துராஜ் முன்னிலை வகித்தார். தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அஞ்சல் துறையின் ’கிரீன்’ முயற்சியின் ஒரு பகுதியான சூரிய மின் உற்பத்தி நிலையத்தை சுமதி ரவிச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து சுமதி ரவிச்சந்திரன் கூறுகையில், “ஊரடங்கு காலகட்டத்தில் அஞ்சல் நிலையத்தில் சாமானியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அஞ்சல் துறை தமிழ்நாடு அரசுடன் இணைந்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணத் தொகையை 90 ஆயிரத்து 561 தொழிலாளர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக வழங்கியுள்ளது.
ஆதாருடன் இணைக்கப்பட்ட எந்தவொரு வங்கிக் கணக்கிலிருந்தும் பணம் எடுக்கும் முறை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஊரடங்கு காலத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 395 பரிவர்த்தனைகள் மூலம் 19.88 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
ஏப்ரல், மே மாதங்களில் மத்திய மண்டலத்தில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் மருந்துகள் உள்பட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய 3,000க்கும் மேற்பட்ட பார்சல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சில சமயங்களில் இரவு நேரங்களிலும் மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட 1,500 பார்சல்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன” என்றார்.