திருச்சி: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் லியோ. லியோ படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. லியோ படம் குறித்த அப்டேட் வெளியான நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. முன்னதாக "நா ரெடி தான் வரவா" பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது தொடர்பான காட்சிகள், டிரெய்லரில் விஜய் ஆபாச வசனம் பேசியது என பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துள்ளது.
நேற்று லியோ படம் வெளியான நிலையில் முதல் காட்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக, ரசிகர்களின் சிறப்பு காட்சியாக அதிகாலை 4 மணி காட்சிக்கு அரசு அனுமதி தரவில்லை. முதல் காட்சி காலை 9 மணிக்கே திரையிடப்பட்டது. மேலும், பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 8 திரையரங்குகளில் நேற்று லியோ திரைப்படம் வெளியானது. லியோ திரைப்படத்தின் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 5 பேரைப் போலீசார் கைது செய்தனா். திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு திரையரங்கத்தில் லியோ பட டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அந்த பகுதியில் போலீசார் அதிரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திரையரங்குகளில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தி வாங்கிய டிக்கெட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வரகனேரியைச் சோ்ந்த கதிரவன் (27) கைது செய்யப்பட்டாா். இதே போல, ஏா்போா்ட் பகுதியைச் சோ்ந்த ராஜாபாண்டி (27), தென்னூரைச் சோ்ந்த கண்ணன் (27), சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த இா்பான் (20), அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த நிஷாந்த் (21) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட 5 நபா்கள் மீதும் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா்.
டிக்கெட் வாங்கச் சென்ற ரசிகர் ஒருவர் டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். மேலும், திருச்சி மாநகரில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி எச்சரித்துள்ளாா்.
இதையும் படிங்க: கெட்டுப்போன பிரியாணியை விற்பனை செய்த தலாப்பாகட்டி கடை.. பாதிக்கப்பட்ட நபர் வெளியிட்ட வீடியோ வைரல்!