நேபாள நாட்டில் சர்வதேச ஊரக இளைஞர்களுக்கான கபாடி, தடகள விளையாட்டு போட்டி கடந்த ஏப்ரல் 27 முதல் 30 வரை நடைபெற்றது. இதில் திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த வீரர்கள் சரவணகுமார், வினோதனி ஆகியோர் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தங்கம் வென்று திருச்சிக்குப் பெருமை சேர்த்தனர்.
இதேபோல் கபாடி போட்டியில் கலந்து கொண்ட அருண், தீபன்ராஜ், விஜயகுமார் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். திருச்சியைச் சேர்ந்த ஹரிஷ்ராகவேந்திரா தேக்வாண்டோ, அர்ஜுன் கேரம் விளையாட்டில் தங்கம் வென்றனர்.
இவர்கள் ரயில் மூலமாக திருச்சிக்கு இன்று (மே 4) வந்தடைந்தனர். ரயில் நிலையத்தில் அவர்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும், நடிகருமான தாமஸ், தினசேவை அறக்கட்டளை நிர்வாகி பகவதி, தன்னார்வ மாற்றுத்திறனாளி சங்கத்தின் நிர்வாகி சிவபிரகாசம், தாய்நேசம் அறக்கட்டளை நிர்வாகி ஹெப்சி சத்தியாராக்கினி, மாற்றம் அமைப்பை சேர்ந்த மணிவேல், பிரவீன்ராஜ், அல்லிகொடி, தினேஷ்குமார்,ரெங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக சரவணகுமார், அருண் இருவரும் சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள நேபாள நாட்டிற்குச் செல்வதற்கான செலவுத் தொகை இல்லாமல் உதவி கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்க்குத் தேவையான உதவிதொகை, உதவிகளை திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும், ஆப்பிள் மில்லட் உணவக உரிமையாளருமான வீரசக்தி உதவிகளை வழங்கி வழியனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.